உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 3ம் குலோத்துங்கன் கால கல்வெட்டு திருவள்ளூர் அருகே கண்டெடுப்பு

3ம் குலோத்துங்கன் கால கல்வெட்டு திருவள்ளூர் அருகே கண்டெடுப்பு

சென்னை: திருவள்ளூர் அருகே தொடுகாடு கிராமத்தில் உள்ள பீமேஸ்வரர் கோவிலில், மூன்றாம் குலோத்துங்கன் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு கிராமத்தில், புதுப்பிக்கப்பட்ட பழமையான பீமேஸ்வரர் கோவில் உள்ளது. இதன் மகாமண்டப விதானத்தில் ஆய்வு செய்த கல்வெட்டு அறிஞர் கிருஷ்ணமூர்த்தி, மூன்றாம் குலோத்துங்க சோழனின் 21வது ஆட்சியாண்டில் பொறிக்கப் பட்ட கல்வெட்டை கண்டறிந்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பீமேஸ்வரர் கோவிலில் பூஜை செய்யும் சாமேருநாதன் பண்டாரம் மற்றும் கல்வெட்டு ஆர்வலர் வேல்முருகன் ஆகியோர் அளித்த தகவலின்படி, கோவிலில் ஆய்வு செய்தேன்.

அதில், ஒரு துாணில் 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும், இரண்டு துாண்களில் உருவங்களும் இருப்பதை அறிந்தேன். கல்வெட்டில், ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து புலியூர் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டு திருச்சுர நாட்டு திருச்சுர கண்ணப்பனான பஞ்சநதிவாணன் நீலகங்கரையன் என்பவர், அப்பகுதியில், சோழர் ஆட்சியின் கீழ் சிற்றரசனாக இருந்ததை அறிய முடிகிறது.

அவர், ஏரிக்கு துாம்பு தந்ததையும் அறிய முடிகிறது. சிற்பத்துடன் உள்ள கல்வெட்டில், ‘குளத்துார் ஆகி வீரபத்திர பண்டாரம்’ என்ற வாசகம் உள்ளது. இதன்படி, வன்னியர் மரபில் சிவனுக்கு பூஜை செய்யும் மரபினரான பண்டாரம் என்போரே, தற்போதும் அந்த கோவிலில் பூஜை செய்கின்றனர்.

மற்றொரு சிற்பத்தின் கீழ், ‘அரசமாமன்ன வீமநயினார்’ என்ற வாசகம் உள்ளது. கல்வெட்டு இல்லாத அரசு உருவம் பெருஞ்சிக்கன் மற்றும் அவர் மனைவியாக இருக்கலாம். தற்போது, சென்னைக்கு அருகில் உள்ள நீலாங்கரை என்ற கிராமம், நீலகங்கரையன் பெயரில் இருந்ததாக கூறப்படுகிறது. இக்கோவிலின் எதிரில், பழமையான தாமரை குளமும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !