பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி நாற்று நடவு உற்சவம் கோலாகலம்
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், இந்தாண்டு ஆனி நாற்று நடவு உற்சவ திருவிழா, கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று மாலை, 4:25 மணிக்கு, பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர்.
தேவேந்திர குல வேளாளர் மடத்தில் இருந்து பொன்னேர் பூட்டி, மேளதாளத்துடன் பக்தர்கள், கோவில் மைதானத்திற்கு ஊர்வலமாக வந்தனர். சிவாச்சாரியார்கள், பொன்னேருக்கு சிறப்பு பூஜை செய்து, மரியாதை செய்தனர். வயலில் பொன்னேர் பூட்டி உழுதனர். பக்தர்கள், மடத்தில் இருந்து நாற்றுகளை எடுத்து ஊர்வலமாக வயலுக்கு வந்தனர். அங்கு கோவில் குருக்கள், வயலில் இறங்கி நாற்று நட, மட நிர்வாகிகளும், பக்தர்களும் பட்டீஸ்வரரை வணங்கி, நாற்று நட்டனர். அதன் தொடர்ச்சியாக, பேரூர் பள்ளுபடல புராணம் வாசிக்கப்பட்டது. பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர், கோவிலை சுற்றி ரத வீதிகளில், திருவீதியுலா வந்து அருள்பாலித்தனர். சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனையுடன் நாற்று நடவு விழா நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று, ஆனி திருமஞ்சனம் நடக்கிறது.