காரமடை காமாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
மேட்டுப்பாளையம்; காரமடை காமாட்சி அம்மன் கோவிலில், உத்திரத் திருமஞ்சனத்தை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
காரமடை செங்குந்தர் பாவடியில் மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆனித் திங்கள் உத்திரத் திருமஞ்சனத்தை முன்னிட்டு, திருக்கல்யாண வைபவம் நடந்தது. இன்று காலை கோவில் நடை திறந்து அம்மனுக்கு வேள்வி மற்றும் கலச பூஜைகள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து காமாட்சி அம்பிகை சமேத ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்தனர்.
பின்பு திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, கற்பக விநாயகர் கோவிலில் இருந்து, திருக்கல்யாண சீர் வரிசை தட்டுகளை, ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். திருக்கல்யாண வைபவம் முடிந்த பின்பு, பூப்பந்து உருட்டி விளையாடும், நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் மஞ்சள் சரடு வழங்கப்பட்டது. விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் மற்றும் கற்பக விநாயகர் கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.