ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலுக்கு ரூ.25 லட்சத்தில் சுவாமி வீதியுலா வாகனங்கள்
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில், சுவாமி வீதியுலா செல்வதற்காக ரூ. 25 லட்சம் மதிப்பிலான வாகனங்களை ஸ்ரீரங்கம் பெரியாஸ்ரமம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீவராஹ மஹாதேசிகன் ஸ்வாமிகள் வழங்கினார்.
வாணாபுரம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவிலான நவபாஷனத்தால் உருவாக்கப்பட்ட அரங்கநாத பெருமாள் சயன நிலையில் மூலவராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஸ்ரீரங்கம் பெரியாஸ்ரமம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீவராஹ மஹாதேசிகன் ஸ்வாமிகள், விஜய யாத்திரையாக இக்கோவிலுக்கு வருகை புரிந்து, மங்களாசாஸனம் செய்து வழிபட்டார். தொடர்ந்து, கோவில் பிரம்மோத்சவத்திற்கு உற்சவர் பெருமாள் சுவாமி திருவீதியுலா புறப்பாட்டில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக ரூ. 25 லட்சம் மதிப்பிலான சூர்யபிரபை, சந்திரபிரபை, ஹனுமந்த வாகனம், ஹம்ஸ வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், யாளி வாகனம், குதிரை வாகனம் என மொத்தமாக 8 வாகனங்களை கோவிலுக்கு வழங்கினார். அப்போது, அறநிலையத்துறை செயல் அலுவலர் சூரியநாராயணன், கோவில் அர்ச்சகர்கள், அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.