அழகே உருவான நல்லூர் கோவில்
நிருத்ய கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், துர்க்கை அம்மனை வழிபட்டு, சிவாலயத்தை சுற்றி வரும் போது, சரபேஸ்வரர் புடைப்பு சிற்பமாக உயரத்தில் காட்சியளிக்கிறார். விஸ்வேஸ்வரர் சன்னிதானத்தை சுற்றி சுற்றுச்சுவரில் வடபுறம் பிரம்மா, சண்டிகேஸ்வரர். துர்க்கை, தென்புறம் அர்த்தநாரீஸ்வரர் உருவமும், விநாயகர் ஒன்றும் தட்சிணாமூர்த்தியும் முறைப்படி அமைக்கப்பட்டுள்ளன. நல்லுார் ஈஸ்வரன் கோவிலில், மனதார வழிபட்டு வந்தால், கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும் என்பது, காலம்காலமாக நிலவிவரும் ஐதீகம்.
மஹா மண்டபத்தில், முருகப் பெருமான் மற்றும் அம்மன் சன்னதிக்கு நேரெதிரே, பழநி தண்டாயுதபாணி சுவாமி மேற்கு நோக்கி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கோவில் வளாகத்தின் மேற்கூரையில், மீனாட்சி கல்யாணம், சுழலும் லிங்கம், போன்ற படக்காட்சிகள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. பிரகார உற்புற சுவர்களில், 63 நாயன்மார்களின் வரலாறு, பன்னிரு ஜோதிர்லிங்கங்கள், மதுரை சொக்கநாதர், மீனாட்சியம்மன், நடராஜர் – சிவகாமியம்மன் படக்காட்சிகள் அமைந்துள்ளன.
அத்துடன், முருகப்பெருமானின், அறுபடை வீடுகளும், முருகப்பெருமாள் அருட்காட்சியும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, மால்மருகனாகிய முருகர் சன்னதிக்கு முன்னதாக, சுவற்றில், பாற்கடலில் பள்ளி கொண்ட ரங்கநாதர், தாயார்கள் படக்காட்சியும், திருப்பதி ஏழுமலையானின் தரிசன காட்சியும் வரையப்பட்டுள்ளன.
ராஜகோபுரத்துக்கு நேராக, விஸ்வேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலை போல், விசாலாட்சி அன்னை, விஸ்வேஸ்வரரின் வலப்பாகத்தை பெற்று நடுநாயகமாக சன்னதியில், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
அம்மன், சுவாமிக்கு வலப்பக்கமாக சன்னதி கொண்டிருக்கும் கோவில்களில், அகத்தியர், சிவபெருமான் திருமண காட்சியை கண்டார் என்பது ஐதீகம். அதன்படி, நல்லுார் திருத்தலத்திலும், திருமணக்காட்சியை கண்டது போன்ற தோற்றம் கொண்டுள்ளது. அதன்காரணமாகத்தான், பெண் பார்க்கும் நிகழ்ச்சியை இக்கோவிலில் நடத்தினால், திருமணம் நிச்சயம் கைகூடி வரும் என்பது இன்றும் நம்பிக்கையாக இருக்கிறது.
அம்மன் சன்னதியின் தென்புறத்தில், வள்ளி, தேவசேனா சமேதராக, சுப்பிரமணியர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். முழுவதும், வெள்ளை கற்களால் எழுப்பப்பட்ட சன்னதிகளின் சுற்று பிரகாரத்தில், சிறிய புடைப்பு சிற்பங்கள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. அம்மன் சன்னதியின் தென்புற சுவற்றில், சிவலிங்கத்துக்கு பசுமாடு பால் சொரிவது போன்ற புடைப்பு சிற்பம் காணப்படுகிறது. அதுமட்டுமல்ல, வரதராஜ பெருமாளை போன்ற சிற்பங்களும் காணப்படுகின்றன.
மஹா மண்டபத்தின் வடபுறம் நடராஜர் சன்னதியும், பள்ளியறையும் அமைந்துள்ளது. மகா மண்டபம், ஆறு அழகிய துாண்களுடன் அமைந்துள்ளது. மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர், அருள்பொங்கும் முகத்துடன் அமைந்துள்ளார். கோவிலின் வெளிப்பிரகார தென்மேற்கு மூலையில் வலம்புரி விநாயகரும், வடகிழக்கு மூலையில் நவக்கிரக மண்டபமும், யாகசாலை மண்டபமும் அமைந்துள்ளது. கங்கா தேவியுடன் அமையப்பெற்ற பழமையான தீர்த்த கிணறும், தெப்பத்தேர் தொட்டியும் நன்கு அமைந்துள்ளது.