தண்டு மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா கோலாகலம்
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட முருங்கை ஊராட்சியில், தண்டு மாரியம்மன், கங்கை அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா, நேற்று விமரிசையாக நடந்தது.
இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆனி மாதம் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்வு விமரிசையாக நடப்பது வழக்கம். கடந்த, 28ம் தேதி, தண்டு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு காப்பு அணிவித்தல் நிகழ்ச்சியுடன், விழா பந்தல் கால் நடப்பட்டது. பின், 3 தினங்களாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகம், முக்கிய வீதிகளில், வீதி உலா வந்தது. முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம், காத்தவராயன் சுவாமி ஊர்வலம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று, காலை 11 மணிக்கு அம்மனுக்கு சொர்ண அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகமும் மகாதீப ஆராதனை நடந்தது. பின், மாலை 5:00 மணிக்கு கங்கை அம்மன், தண்டு மாரியம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், விநாயகர், தண்டு மாரியம்மன், முத்தாலம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.