நத்தம் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா; பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி
நத்தம்; நத்தம் காமராஜ் நகர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி ஜூன்.16 காப்பு கட்டுதலுடன் தொடங்கிய விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, முளைப்பாரி எடுத்து தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர். பின் அம்மன்குளத்தில் இருந்து கரகம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனாடி கிடாய்கள் வெட்டி இரத்தம் குடிக்கும் நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடந்தது.இதில் 50-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டது. தொடர்ந்து கரகம் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது.விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை காமராஜ் நகர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.