சனாதன தர்மத்தை காக்கும் பணியில் கிராம கோவில் பூசாரிகள்; ஆர்ஆர்.கோபால்ஜி பேச்சு
ராமேஸ்வரம்: ‘கிராம கோவில் பூஜாரிகள் பேரவை’ சார்பில், கிராம கோவில் பூசாரிகளுக்கான, 56வது பயிற்சி முகாம், ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் பங்கேற்ற கிராம கோவில் பூஜாரிகள் பேரவை அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி பேசியதாவது: நம் முன்னோர்கள் சனாதன தர்மத்தை பெரும் போராட்டங்களுக்கு மத்தியில், வாழையடி வாழையாக காப்பாற்றி, நம்மிடம் கொடுத்திருக்கின்றனர். நம் நாட்டில் சனாதனத்தை அழித்தொழிக்க, விதவிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை சாத்வீகமான முறையில், நம் முன்னோர்கள் முறியடித்தனர்.
முகலாயர்கள் படையெடுப்பின்போது, கோவில்களை இடித்து தரைமட்டமாக்கி, மக்களை மத மாற்றம் செய்தனர். ஆங்கிலேயர்கள், கிழக்கிந்திய கம்பெனி என்ற போர்வையில் வியாபாரத்துக்காக உள்ளே வந்து நாட்டை பிடித்தனர்; கூடவே, பாதிரியார்களை அழைத்து வந்து மத மாற்றம் செய்தனர். மெக்காலே கல்வி எவ்வித பேதமுமின்றி, எல்லா மக்களும் கற்கும் வகையில் நம் நாட்டில், 11 லட்சம் பாடசாலைகள் இருந்தன. அவற்றில் ஆன்மிகம், அறிவியல், கட்டடக்கலை, வாழ்வியல் கலை, கணிதம், மருத்துவம் என, எல்லாவிதமான கல்வியும் பயிற்றுவிக்கப்பட்டன. ஆனால், ஹிந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக, அந்த பாடசாலைகளை எல்லாம் அழித்துவிட்டு, மெக்காலே கல்வி முறையை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தனர். பிளவுபட்ட ஹிந்துக்கள் நம் பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பதே அக்கல்வி முறையின் நோக்கம். நம் வழிபாட்டு முறையை கொச்சைப்படுத்தி, நம்மை பாவிகளே என்று ஆங்கிலேயர்கள் அழைத்தனர். இதற்கெல்லாம் காரணம், ஹிந்து சமுதாயம் பிளவுபட்டு கிடப்பது தான். நாம் ஒன்றுபடக்கூடாது; இந்தியா வல்லரசாகக்கூடாது என்பதற்காக, கிறிஸ்துவ மிஷினரிகள் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம், இந்தியாவுக்குள் வருகிறது. மொபைல் போன் மூலம் பிரிவினை சக்திகளால், மூளைச்சலவை நடந்து வருகிறது. சிவன் வேறு, ருத்ரன் வேறு, முருகன் வேறு, சுப்ரமணியன் வேறு என, கடவுள்களையே பிளவுபடுத்தும் செயல் நடக்கிறது. ஹிந்து சமுதாயத்தில் இன்று பக்திக்கு பஞ்சமில்லை. அதை தடுக்க, கிறிஸ்துவ மிஷனரிகள் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை தான், ‘தேர்தல் வெற்றி’ வாயிலான ஆட்சி மாற்றம். தேர்தலுக்கு முன் விஜய் என்றவர், தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்கும்போது, ‘ஜோசப் விஜய்’ என கூறினார்.
எத்தனை கோடி ஹிந்துக்கள் இருந்தாலும், ஆட்சி அதிகாரத்தை பெற்று விட்டோம் என்பதே அதன் அர்த்தம். வேட்பாளர் யார் என தெரியாமலே ஓட்டு போட்டனர். இது ஒரு ‘மாய வலை’ என்பது, இப்போது ஹிந்துக்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது. புரிந்துகொண்ட தி.மு.க. , தமிழகத்தை ஆண்ட கட்சி வீழ்ந்ததற்கு காரணம், ‘சனாதனத்தை ஒழித்தே தீருவோம்’ என்று ஹிந்து விரோதமாக நடந்து கொண்டது தான். திருப்பரங்குன்றத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும், தீபம் ஏற்ற மாட்டோம் என, ஹிந்து விரோத நடவடிக்கைகளை கையாண்டது தான். ‘அண்ணாமலைக்கு அரோகரா’ என கோஷம் எழுப்பாமல், இனி வேலைக்கு ஆகாது என்பதை இவர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். தர்மம் காக்க சங்கல்பம் மக்களிடையே நேரடி தொடர்பு கொண்டவர்கள் கிராம கோவில் பூசாரிகள். அவர்கள் ஒவ்வொருவரும், நம் சனாதன தர்மத்தை காக்கும் பணியில் ஈடுபட வேண்டும். சனாதனம் என்பது, அழிவில்லாத நம் வாழ்வியல் தர்மம். ஒவ்வொரு கிராம கோவில் பூசாரியும், என் ஊர், என் தெருவில் யாரையும் மதம் மாறவிடாமல் பார்த்துக் கொள்வேன்; மதம் மாறிச் சென்றவர்களையும், தாய் மதம் திரும்பச் செய்வேன். மாதத்துக்கு, ஒரு குடும்பத்தையாவது தாய் மதம் திரும்ப வைப்பேன் என்ற சங்கல்பத்துடன் இங்கிருந்து நீங்கள் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.