சோழன் புடைப்பு சிற்பம், கல்வெட்டு பெரம்பலுாரில் கண்டெடுப்பு
தஞ்சாவூர்: சோழர் கால கோவிலில், முதலாம் ராஜாதிராஜ சோழன் புடைப்பு சிற்பம், கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டன.
பெரம்பலுார் மாவட்டம், கொளத்துாரில் சிதைந்த நிலையில் உள்ள சவுந்தரேசுவரர் கோவிலில், வரலாற்று ஆய்வாளர் மணி.மாறன் ஆய்வு செய்தார். அதில், இக்கோவில் கருவறையின் பின்பக்கம், அண்ணாமலையார், கோஷ்டமாடத்தின் மேற்பகுதியில், முதலாம் ராஜாதிராஜ சோழன், தன் மனைவியுடன் சுவாமியை வணங்கும் புடைப்பு சிற்பமும், கல்வெட்டும் இருப்பதை அவர் கண்டறிந்தார்.
இதுகுறித்து, மணி.மாறன் கூறியதாவது: இக்கோவில், பராந்தக சோழனால் நிர்மாணிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. கோவிலின் வெளிப்புறம் பெரிய கல்வெட்டு உள்ளது. அதில், 1681ல் கரங்கப்பமழவராய நயினார் அளித்த கொடை குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது. மேலும், சண்டேசநயினார் பண்டாரத்திற்கு, 500 குழி நிலம் தானம் கொடுத்த விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.