கன்னட ஆடி மாதத்தில் பக்தர்களுக்கு சாமுண்டி மலையில் சிறப்பு ஏற்பாடுகள்
மைசூரு: கன்னட ஆடி மாதங்களில் மைசூரு சாமுண்டி மலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு, அமைச்சர் யதீந்திரா உத்தரவிட்டார்.
மைசூரு சாமுண்டி மலைக்கு நேற்று வந்த நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் யதீந்திரா, சாமுண்டீஸ்வரி தேவியை தரிசனம் செய்தார். பின், அங்கு அன்னதான கூடத்தில், கன்னட ஆடி மாத ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
கன்னட ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், ஜூலை 17, 24, 31, ஆக., 7லும், ஆக., 4ல் சாமுண்டீஸ்வரி தேவியின் பிறந்த நாளை ஒட்டி, மலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 5:30 மணி முதல் இரவு கோவில் நடை மூடும் வரை, தரிசனத்துக்கு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
சாமுண்டீஸ்வரி தேவியின் பிறந்த நாளை ஒட்டி, அன்று காலை 8:00 மணி முதல் பொது மக்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்.
வி.ஐ.பி., தரிசனம், அதிகாலை 5:30 முதல் 9:30 மணி வரை மட்டுமே ஒதுக்கப்படும். அதன் பின், பக்தர்களுடன் வி.ஐ.பி.,க்கள் வரிசையில் வர வேண்டும். பெண்களுக்கென தனி வரிசை கிடையாது.
ஒருவேளை ஆடி வெள்ளிக்கிழமைகளில், ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் மட்டுமே, தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆடி வெள்ளி, சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமைகளில், தனியார் வாகனங்கள், சாமுண்டி மலையில் பயணிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலையில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது. அவர்களின் ஆதார் எண்களை சரிபார்த்த பின்னரே, அவர்களை மலையில் ஏற அனுமதிக்க வேண்டும்.
தனியார் வாகனங்களில் வரும் பக்தர்கள், தங்கள் வாகனங்களை சசிரஞ்சன் மைதானத்தில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து புறப்படும் கே.எஸ்.ஆர்.டி.சி., இணைப்பு பஸ்சில் மலைக்கு செல்ல வேண்டும்.
24 மணி நேர ஆம்புலன்ஸ் தனியார் அமைப்புகள் மூலம் வழங்கப்படும் பிரசாதங்கள், சசிரஞ்சன் மைதானத்தில் மட்டுமே வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கோவில் அருகில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ், மருத்துவ குழு தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.