மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; விழாக்கோலம் பூண்ட அரண்மனைப்புதுார்
அரண்மனைப்புதுார்: ஸ்ரீ அன்பு விநாயகர், ஸ்ரீமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதனால், அரண்மனைப்புதுார் விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருப்பூர், அரண்மனைப்புதுாரிலுள்ள ஸ்ரீ அன்பு விநாயகர், ஸ்ரீமாகாளியம்மன் நடுப்பங்கு, ஸ்ரீகருப்பராயன், ஸ்ரீகன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 1ம் தேதி, துவங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான காலை முதல் மதியம் வரை விநாயகர் வழிபாடு, தீர்த்த சங்க்ரஹணம், பாவநாபிஷேகம், அனைத்து மூர்த்திகளுக்கும் அதிவாசகிரின பாலிகை, முளைப்பாரி, கோபுர கலசங்கள் வைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. மாலை, 5:00 மணிக்கு முதற்கால யாகம் நடந்தது.
இன்று காலை, 8:00 மணிக்கு துவங்கும் விழாவில், 2ம் கால யாகம், வேதிகார்ச்சனை, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, சங்க்யா ஹோமம் மற்றும் அனைத்து மூலவர் பரிவார தெய்வங்களுக்கும் எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றப்படுகிறது. மாலை, 5:00 மணிக்கு, 3ம் கால யாகம், நான்கு வேத பாராயணங்கள், நாதஸ்வர வாத்யங்கள் கச்சேரி நடைபெறும். நாளை அதிகாலை, 4:00 மணிக்கு, 4ம் கால யாக சாலையுடன் துவங்கும் விழாவில், காலை, 6:00 மணிக்கு, ஸ்ரீ அன்பு விநாயகர், கருப்பராயன், கன்னிமார் தெய்வங்களுக்கும்; காலை, 9:45 மணிக்கு, மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். தங்கமணி சிவாச்சாரியார், மாகாளியம்மன் கோவில் அர்ச்சகர் கணேஷ்பாபு சிவாச்சாரியார் ஆகியோர் கும்பாபிஷேகம் செய்விக்கின்றனர். விழாவையொட்டி, நடுப்பங்கு தோட்டத்தில் நாளை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.