9 ஐம்பொன் சுவாமி சிலைகள் மன்னார்குடியில் கண்டெடுப்பு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், பாமிணி கிராம நாகநாதசுவாமி கோவில் பின்புற குளத்தில், நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரபுரத்தை சேர்ந்த ஜெய்கணேசன், 29, சின்னதுரை, 48 ஆகிய இருவர் உடும்பு பிடிக்க வந்தனர். அங்குள்ள ஒரு வலையில், உடும்பு புகுந்த இடத்தை இருவரும் தோண்டிய போது, வித்தியாசமான சத்தம் கேட்டது. சாமி சிலையும் தென் பட்டது. மன்னார்குடி தாசில்தார் நக்கீரன் மேற்பார்வையில், அப்பகுதியில், பொக்லைன் உதவியுடன் பள்ளம் தோண்டிய போது, சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராஜர், காளி, மாணிக்கவாசகர் உட்பட, 9 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், ஓரடி உயரமுள்ள பீடமும் கண்டெடுக்கப்பட்டது. ஓரடி முதல், 3 அடிகள் உயரம் உள்ள, 9 சிலைகளும் மன்னார்குடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. நாகை மண்டல தொல்லியல் ஆலோசகர் சேகர் தலைமையிலான குழுவினர் சிலைகளை ஆய்வு செய்தனர். ஐம்பொன்னாலான அந்தசிலைகளில், காளியை தவிர மற்ற சிலைகள், 11ம் நுாற்றாண்டை சேர்ந்தவை என, தெரியவந்தது.