கல்பாக்கம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா விமரிசை
கல்பாக்கம்: கல்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடைபெற்றது.
கல்பாக்கம் அருகே நகரியத்தில், பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் – ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன், விநாயகர், முருகர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதன்படி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு, உபயதாரர்கள் மூலம், ௮ லட்சம் ரூபாய் நிதி திரட்டி, கோவில் பணிகள் நடந்து வந்தன. சுவாமியர் சன்னிதிகள் பராமரிப்பது, புதிய வர்ணம் தீட்டுவது உள்ளிட்ட திருப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. தொடர்ந்து, விநாயகர் பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா, இம்மாதம் 2ல் தொடங்கியது. நேற்று காலை, நான்காம் கால பூஜைகள், ஹோமங்கள் முடிந்து, சன்னிதிகளின் கோபுர கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேக விழா விமரிசையாக நடத்தப்பட்டது. தவிர மூலவர்கள் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் காமாட்சி அம்மன், உத்சவர்கள், பரிவார மூர்த்திகள் ஆகியோருக்கும் கலச நீர் ஊற்றப்பட்டது. கல்பாக்கம், சுற்றுப்புற பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். அதே போல், சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. திருக்கச்சூர், பெரியார் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.