அசைக்க முடியாத பக்தி; நடந்தே திருப்பதி திருமலை வந்த 116 வயது சென்னை பெண் பக்தர்
திருப்பதி; பகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி மீதான அசைக்க முடியாத பக்தியால் உந்தப்பட்டு, நடந்தே திருமலைக்கு வந்தடைந்த தமிழகத்தை சேர்ந்த 116 வயதுடைய பக்தர் நவநீதம்மாவுக்கு திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் இன்று திங்கள்கிழமை சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தது.
திருமலைக்கு அவர் நடந்து செல்லும் காணொளி ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவரது பக்தி பரவலான பாராட்டைப் பெற்றது. இதனை அங்கீகரிக்கும் விதமாக, மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது சமூக ஊடகப் பக்கங்களில், "பக்திக்கு வயது ஒரு தடையல்ல" என்றும், ஸ்ரீவாரு மீது பக்தர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு இந்த மூதாட்டி ஒரு சான்றாகத் திகழ்கிறார் என்றும் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, அந்த மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்த விவரங்களை அறிய தேவஸ்தான தலைவர் வளை தளத்தின் வாயிலாகக் கோரிக்கை விடுத்தார். அவரின் அறிவுறுத்தலின் பேரில், தேவஸ்தான கண்காணிப்புத் துறை அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு, தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த நவநீதம்மா அவர்களைக் கண்டறிந்து தொடர்பு கொண்டனர். இன்று திங்கள்கிழமை காலை நவநீதம்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விஐபி பிரேக் தரிசனம் (VIP Break Darshan) ஏற்பாடு செய்யப்பட்டது. தேவஸ்தான ஊழியர்கள் அவரை பயோமெட்ரிக் மையத்திலிருந்து தரிசன வரிசை வரை நேரில் அழைத்துச் சென்று, அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் உறுதி செய்தனர். பின்னர், ரங்கநாயகலு மண்டபத்தில், நிர்வாக அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா ஏற்பாட்டின் பேரில், வேத பண்டிதர்கள் அந்த மூதாட்டிக்கு வேத ஆசீர்வாதம் வழங்கினர்; மேலும் அவருக்குப் பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு, ஸ்ரீவாரியின் தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.. இந்நிகழ்வின்போது பேசிய நவநீதம்மாவின் பேரன் திக்பதி, தனது பாட்டிக்கும் குடும்பத்தினருக்கும் மிகச் சிறப்பான தரிசன அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்த தேவஸ்தான அதிகாரிகளை இறைவனின் வடிவமாகவே கருதுவதாகக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், ஊழியர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியையும் அவர் தெரிவித்தார்.