கரும்பாக்கம் மல்லிகாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
உத்திரமேரூர்: கரும்பாக்கம், மல்லிகாதீஸ்வரர் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின் மஹா கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் பிரம்ம காமாட்சி அம்மன் உடனுறை மல்லிகாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடைசியாக 2014ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது.
இதையடுத்து கோவில் புனரமைப்பு பணி செய்து கும்பாபிஷேக விழா நடத்த அப்பகுதி மக்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கடந்த சில மாதங்களாக கோவில் கட்டடம் மற்றும் கோபுரம் பழுது பார்த்தல் பணி நடைபெற்று வந்தது.
மேலும், கரும்பாக்கத்தில் உள்ள சூராத்தம்மன், துலுக்கானத்தம்மன் கோவில்களிலும் கட்டடம் பழுது பார்த்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன. புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 3ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், 4ம் தேதி இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தன.
நேற்று காலை கோ பூஜை, விக்னேஷ்வர பூஜைகளை தொடர்ந்து, காலை 6:30 மணிக்கு சூராத்தம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம், 7:00 மணிக்கு துலுக்கானத்தம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து 9:00 மணிக்கு, யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு, 9:30 மணிக்கு மல்லிகாதீஸ்வரர் கோவில் கோபுர கலசம் மீது புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், கரும்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.