பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம் இன்று நடந்தது.
இந்தாண்டு பிரமோற்சவம் கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. தினமும் காலை, மாலை சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது. கடந்த 4ம் தேதி காலை 10:30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இன்று முக்கிய விழாவான திருத்தேரோட்ட உற்சவம் நடந்தது. அதனையொட்டி, உற்சவர் அமிர்தவல்லி நாயக சமேதராய் லட்சுமிநரசிம்ம பெருமாள், காலை 7:00 மணிக்கு கோவில் முன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேரோட்டம் துவங்கியது. திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். லட்சுமணன் எம்.எல்.ஏ., தி.மு.க., ஒன்றிய செயலாளர் பிரபாகரன், அறநிலையத்துறை உதவி ஆணையர் காந்தராஜன், இணை ஆணையர் சிவலிங்கம், ஆய்வாளர் மதுமதி, செயல் அலுவலர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவில் அர்ச்சகர் பார்த்தசாரதி, இஞ்சிமேடு கோவில் அர்ச்சகர் வரதராஜன் தலைமையிலான கோவில் நிர்வாகத்தினர், பூவரசன்குப்பம் மக்கள் தேரோட்ட விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். நாளை 7ம் தேதி காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனமும், காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது.