சுவாமி அபிஷேகத்துக்கு தீர்த்தம் மணிமுக்தாற்றில் உறைகிணறு
விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் சுவாமிக்கு அபிஷேக தீர்த்தம் வேண்டி, மணிமுக்தாற்றில் உறைகிணறு அமைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் பிராது கட்டி வேண்டினால், 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில் நிறைவேறும் என்பது ஐதீகம். தினமும் காலையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்திட, மணிமுக்தாற்றில் இருந்து மேள தாளத்துடன் கோவில் சிவாச்சாரியார்கள் தீர்த்தம் எடுத்து வருவது வழக்கம். தற்போது, மணிமுக்தாறு தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதையடுத்து, சுவாமிக்கு அபிஷேக தீர்த்தம் சுத்தமாக கிடைக்கும் வகையில், ஆற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டது. இதனை, கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து, நேற்று முதல் தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் துவங்கினர். வரும் 2027ல் கும்பாபிஷேக நடத்தும் வகையில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தீர்த்தம் வேண்டி உறைகிணறுகள் அமைத்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.