திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம்
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நடைபெற்று வரும் ஆடிப்பூரத் திருவிழாவின் 4-ம் நாளையொட்டி, காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய 10 நாள் திருவிழாவின் 4-வது நாளான இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து வெள்ளை பட்டாடை அணிந்த காந்திமதி அம்பாள், சீர்வரிசைகளுடன் மேளதாளம் முழங்க சுவாமி சன்னதிக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளிய அம்பாளுக்கு சந்தனம், ஜவ்வாது, சந்தனாதி தைலம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் நலுங்கு வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, வளையல்கள் அணிவித்து வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.