உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்தலசயனர் கோவில் முகப்பில் விளம்பர பதாகை வைக்க தடை

ஸ்தலசயனர் கோவில் முகப்பில் விளம்பர பதாகை வைக்க தடை

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் பாரம்பரிய மண்டபத்தில் விளம்பர பதாகைகள் வைக்க, தடை விதித்துள்ள நிலையில், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது. வைணவ சமய 108 திவ்விய தேசங்களில், 63ம் கோவிலாக சிறப்பு பெற்றது. கோவில் வளாக நுழைவாயில் பகுதியில், பழங்கால பாரம்பரிய இயல் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை மறைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் விழாக்கள், நிகழ்ச்சிகள் தொடர்பான விளம்பர பதாகைகளை அமைக்கின்றனர்.

இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பதாகையை கண்டு அதிருப்தியடைகின்றனர். நாளடைவில் கிழிந்து தொங்கி அலங்கோல அவலத்தில் உள்ளது. அதை தவிர்க்க, கோவில் சிறப்புகள் குறித்த தகவல்களுடன் பதாகை அமைக்கப்பட்ட நிலையில், அதையும் அகற்றி, பிற பதாகைகள் அமைக்கப்பட்டன. இதனால் பதாகை வைப்பவர்கள் இடையே, மோதல் போக்கும் ஏற்பட்டது. இந்நிலையில், மண்டபத்தில் பதாகை அமைக்க கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !