ஸ்ரீலட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் 3 ஆண்டாக கிடப்பில் உள்ள கும்பாபிஷேகம்
கடம்பத்துார்: ஹிந்து சமய அறநிலையத்துறையால் தொடங்கப்பட்ட நரசிங்கபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் மகா கும்பாபிஷேக பணிகள், மூன்று ஆண்டுகளாகியும் நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சியில் அமைந்துள்ளது, மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவில். இந்த கோவிலில், கடந்த 2007ம் ஆண்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், 16 ஆண்டுளுக்குப் பின், 2024ம் ஆண்டு மார்ச் மாதம் மகா கும்பாபிஷேகம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர். பாலாலயம் இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த உபயதாரர் வழங்கிய நிதியின் கீழ், 25.80 லட்சம் ரூபாயில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள, ஹிந்து சமய அறநிலையத்துறை உத்தரவின்படி, கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகளான நிலையிலும், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆட்சி காலத்தில், நரசிம்மர் கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவராக, தி.மு.க., கிளைச் செயலருமான மோகனசுந்தரம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், கடந்த 2025ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி, ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல், கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குமிடமான அஷ்ட லட்சுமி மண்டபத்தில், அறங்காவலர்களுக்காக அலுவலகம் கட்டும் பணிகளை மேற்கொண்டார். தகவலறிந்த ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், புதிதாக கட்டப்பட்ட அறங்காவலர் அறை கட்டடத்தை அதிரடியாக அகற்றினர். அதிர்ச்சி இந்நிலையில், கடந்த 2025ம் ஆண்டு, ஆகஸ்டு 19ம் தேதி, மோகனசுந்தரம் தன்னிச்சையாக முடிவெடுத்து, அதிகாரிகள் இல்லாத நேரத்தில் கொடி மர தகடுகளை பிரித்தெடுத்தார். இதில், கொடி மரம் சேதமடைந்தது. இது, பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கோவில் கும்பாபஷேகம் எப்போது நடைபெறும் என்பது, கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், கடந்த 2025ம் ஆண்டு, மார்ச் மாதம், 85 சதவீதம் வேலை நிறைவடைந்ததாக ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது கோபுரத்தில் அனைத்து பகுதிகளிலும் செடிகள் வளர்ந்து, வண்ணப்பூச்சு உதிர்ந்து காணப்படுவது, பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலில் நேரில் ஆய்வு செய்து, கிடப்பில் போடப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை விரைவில் முடித்து, கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, நரசிம்மர் கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சிந்துமதி கூறியதாவது: கோவில் சீரமைப்பு பணிக்கு, புதிய உபயதாரரை தேர்ந்தெடுத்துள்ளோம். சேதமடைந்த கொடி மரத்திற்கு பதிலாக, புதிய கொடி மரம் அமைப்பதற்கும் உபயதாரரை தேர்ந்தெடுத்துள்ளோம். விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு, மூன்று மாதத்திற்குள் மகா கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.