அழியும் நிலையில் பழங்கால கல்வெட்டுகள்! திருப்பணியால் பாதுகாக்கலாம்
உடுமலை: உடுமலை அருகே கோவிலில், பராமரிப்பில்லாமல் அழியும் கல்வெட்டுகளை பாதுகாத்து, திருப்பணிகளை மேற்கொள்ள, வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே குமரலிங்கத்தில், ராஜவாய்க்கால் அருகில் ஆத்தோர வெங்கட்ரமணர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்கள் கூறியதாவது: வழிபாடு இல்லாமல் காணப்படும் இக்கோவிலில் கல்வெட்டுகள் நிறைந்துள்ளது. இங்குள்ள கல்வெட்டுகள், 1909ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் படி எடுக்கப்பட்டுள்ளன. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலை, பெருமாள் கோவிலாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கி.பி., 13ம் நுாற்றாண்டு வரையிலானகொங்குச் சோழர்கள், வீரகேரள மன்னர்களால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இவை அனைத்தும் இக்கோவிலை ‘காத்தாட் கொண்ட நாயனார் ’ சிவன் கோவில் என குறிப்பிடுகின்றன.
கொங்குச்சோழ மன்னர் வீர ராஜேந்திரசோழரின், 19ம் ஆட்சி ஆண்டில் (கி.பி.(1225) பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு, மடப்புறமாக கொடை அளிக்கப்பட்ட நிலத்தை குறிப்பிடுகிறது. வீரகேரள மன்னர் கரிகால் சோழரின் சிதைந்த கல்வெட்டும் உள்ளது. பலிபீடத்தில் வீரராஜேந்திர சோழரின், 23ம் ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்ட ஒரு சிதைந்த கல்வெட்டு தில்லை மூவாயிரவர் எனும் ஒரு சிவ பிராமணரைக் குறிப்பிடுகிறது. வைணவ சமயத்தைச்சார்ந்த, பாளையப்பட்டுகளின் ஆட்சி காலத்தில் சிதைந்த நிலையில் இருந்த இச்சிவன் கோவிலை, கி.பி.,17ஆம் நூற்றாண்டின்போது வைணவ கோவிலாக மாற்றும் முயற்சி நடந்திருக்கலாம். கோவில் திருப்பணிகள் துவங்கி தடைபட்டுள்ளது. தடைபட்ட பணிகளை துவக்கி, பழங்கால பொக்கிஷமான கல்வெட்டுகளையும் அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.