கைலாயநாதர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
அணைக்கட்டு: ஒடுகத்துார் அருகே, சிவன் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நேற்று நடந்தது. வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த பாக்கம் கிராமத்தில் உத்திரகாவேரி ஆற்றங்கரையோரம் 2,000 ஆண்டு பழமை வாய்ந்த உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் கோவில் உள்ளது.
காசிக்கு நிகரான இக்கோயிலில் விசேஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று வருகிறது. மேலும் பிரதோஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இங்கு தரிசனம் செய்வார்கள். கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் கடைசி அல்லது வைகாசி மாதம் தொடக்கத்தில் மூலவர் சிவபெருமான் மீது சூரியஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வைகாசி மாதம் முதல் நாளே சூரியஒளி சிவபெருமான் மீது விழுந்து தொட்டு வணங்கும் அபூர்வ நிகழ்வு நடந்தது. அதன் பிறகு ஆடி மாதம் 8ம் நாளான நேற்று காலை மூலவர் சிவன் மீது மீண்டும் சூரிய ஒளி விழுந்து தொட்டு வணங்கும் அபூர்வ நிகழ்வு நடந்தது. மேலும், காலை 6:00 மணிக்கும் தொடங்கும் இந்த நிகழ்வு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. பின், மூலவருக்கு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த அபூர்வ நிகழ்வை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.