உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  சங்கரன்கோவிலில் ஆடித்தபசு காட்சி; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

 சங்கரன்கோவிலில் ஆடித்தபசு காட்சி; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

 திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் இன்று மாலை நடந்த ஆடித்தபசு காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

இக்கோயிலில் ஆடித்தபசு விழா ஜூலை 18 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் கோமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் ரதவீதிகளில் எழுந்தருளினார். 9-ம் திருநாளான ஜூலை 26 ல் தேரோட்டம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசு காட்சி இன்று மாலை நடந்தது. சங்கரநாராயண சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெற்கு ரதவீதியில் தபசு பந்தலுக்கு எழுந்தருளினார். தபசு மண்டபத்தில் ஒற்றைக்காலில் தவம் செய்யும் கோலத்தில் தங்கச் சப்பரத்தில் கோமதி அம்பாள் எழுந்தருளினார். அம்பாள், சங்கரநாராயண சுவாமியை மூன்று முறை வலம் வந்தார். தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் பட்டு, பரிவட்டம், மாலை மாற்றும் வைபவம் நடந்தது. மாலை 6:05 மணிக்கு கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக சுவாமி காட்சி அளித்தார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் சங்கரா... நாராயணா... என பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர்.

தொடர்ந்து இரவு 12:00 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி மீண்டும் தபசு பந்தலுக்கு எழுந்தருளி, கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்கராக காட்சி அளித்த இரண்டாவது தபசு காட்சி நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !