பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ தேரோட்டம்
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் கோவிந்தா கோஷம் முழங்க தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனர்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. மூலவராக பரமஸ்வாமி அருள் பாலிக்கிறார். மதுரை அழகர் கோவிலை போன்று இங்கும் ஆடி பிரம்மோற்ஸவம் ஆண்டு தோறும் கொடியேற்றத்துடன் நடக்கிறது. இன்று வைகை ஆற்றில் இருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் அதிகாலை 4:00 மணிக்கு கோயிலை அடைந்தார். பின்னர் காலை 11:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேருக்கு சிறப்பு தீபராதனைகள் நடந்து, 11:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் திருத்தேரில் அமர்ந்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். மதியம் 1:00 மணிக்கு தேர் நிலையை அடைந்த பின்னர் பெருமாள் கோயில் உள் பிரகாரத்தில் ஆடி அசைந்து சென்றார். அப்போது நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தீபாராதனை நிறைவடைந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இரவு 7:00 மணிக்கு சயன திருக்கோலத்தில் பெருமாள் பல்லக்கில் உலா வந்தார். நாளை காலை தீர்த்தவாரி மற்றும் இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.