திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசனம்
வானுார்: திருவக்கரை வக்ரகாளி அம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நடந்த ஜோதி தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வானுார் அடுத்த திருவக்கரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மன் மற்றும் சந்திர மவுலீஸ்வரர் தனித்தனி கோவில்கள் அமைந்துள்ளன. இங்குள்ள வக்ரகாளியம்மன் கோவிலில், ஒவ்வொரு மாதமும், அமாவாசை தினங்களில் மதியம், 12:00 மணிக்கும், பவுர்ணமி தினங்களில் நள்ளிரவு 12:00 மணிக்கும் ஜோதி ஏற்றப்படுவது வழக்கம். அதேபோல் ஆடி மாத பவுர்ணமியான நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு கோவில் மேலே அமைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட கொப்பரையில் ஜோதி ஏற்றப்பட்டது. முன்னதாக சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்ட மூலவருக்கு நள்ளிரவு 12:00 மணி அளவில் தீபம் காண்பிக்கப்பட்டது. ஜோதியை கொண்டு வந்து, கோவில் மேலே அமைக்கப்பட்ட பிரம்மாண்ட கொப்பரையில் வைக்கப்பட்டிருந்த கற்பூரங்களை ஏற்றி வைத்தனர். இந்த ஜோதியை புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், சென்னை மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். விழாவையொட்டி கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., ரூபன் குமார் தலைமையில் வானுார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.