ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் படித்துறையில் பைப் மூலம் சவர் வசதி
பேரூர்; பேரூர் படித்துறையில், ஆடிப்பெருக்கையொட்டி, பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க வருவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு தினத்தில், முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும். இந்நிலையில், நாளை ஆடிப்பெருக்கு என்பதால் பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், தங்களின் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்தும், அதிகாலை முதலே பொதுமக்கள் வர துவங்குவார்கள். இந்நிலையில், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், நொய்யல் ஆற்றில் நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், திதி, தர்ப்பணம் கொடுப்பவர்கள், நொய்யல் ஆற்றில் நீராட ஏதுவாக, பேரூர் பேரூராட்சி சார்பில், ஆற்றின் கரையில், பைப் மூலம் சவர் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றில், பழைய துணிகள், குப்பை வீசாமல் தடுக்கு, பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பணி மேற்கொள்ள உள்ளார்கள். தர்ப்பண மண்டபத்தில், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.