உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி: ஆடிப்பெருக்கு கோவில்களில் சிறப்பு பூஜை

பொள்ளாச்சி: ஆடிப்பெருக்கு கோவில்களில் சிறப்பு பூஜை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்று பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

பொள்ளாச்சி, ஆனைமலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ அரங்கநாதப் பெருமாள் கோவிலில், ஆடி 18ம் நாளான நேற்று சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், பால், தயிர், இளநீர், உள்ளிட்ட 9 வகையான அபிஷேகம் மற்றும் ரோஜா, செவ்வந்தி, துளசி உள்ளிட்ட, 9 வகையான மலர் அலங்காரம் நடந்தது.

தொடர்ந்து பக்தர்கள் நெய்விளக்குகள் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள் சரடு, கல்கண்டு, குங்குமம், மஞ்சள் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

ஆழியாறு வனப்பகுதியில் நவமலை செல்லும் வழியில் உள்ள ஆதாளியம்மன் கோவிலில் மழை வேண்டியும், ஆடி 18 சிறப்பு பூஜை நடந்தது. இதில், பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அம்மனுக்கு, உருவார பொம்மைகள் வைத்து, நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர்.

கன்னிமார் வழிபாடு பொள்ளாச்சி அருகே, அம்பராம்பாளையம், ஆனைமலையில், ஆழியாறு ஆற்றங்கரையில் மக்கள் குடும்பத்துடன் பங்கேற்று கன்னிமார் சுவாமி வழிபாடு செய்தனர். சுவாமிக்கு படையலிட்டு, புதுமண தம்பதியர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

பொள்ளாச்சி, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நேற்று காலை ஆழியாறு ஆற்றுக்கு சீர் வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி ஆற்றங்கரையில் நடந்தது. இதில், விஸ்வ ஹிந்து பரிஷத் கோட்ட செயலாளர் மகேஷ், மாநில மகளிர் அணி பொறுப்பாளர் சுகந்தி, மாவட்ட செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இறுதியில், ஆற்றுக்கு பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றின் கரையில் மக்கள் பலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். காகம், நாய் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவிட்டு வழிபட்டனர்.

வால்பாறை வால்பாறை சுப்ர மணிய சுவாமி கோவிலில், அடிப்பெருக்கு நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. அதன்பின், சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. வால்பாறை எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவில், வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவில், சிறுவர் பூங்கா ஆதிபராசக்தி கோவில்களில், கணபதி பூஜையும், அம்மனுக்கு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !