உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை

மேட்டுப்பாளையம்: ஆடிப்பெருக்கு முன்னிட்டு, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.


மேட்டுப்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு, நேற்று காலை, 5:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.


அபிஷேகம், அலங்கார பூஜை முடிந்தவுடன், 6:00 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆற்றுக்கு சென்று, கை, கால்களை சுத்தம் செய்து, விநாயகரை வழிபட்டனர். பின்பு நீண்ட வரிசையில் காத்திருந்து, அம்மனை வழிபட்டனர். அதன் பின் பக்காசூரன் சன்னதிக்கு வந்து, வேண்டுதல் நிறைவேற வேண்டும் என, வேலில் எலுமிச்சை பழத்தை குத்தி, வழிபட்டு சென்றனர். பக்தர்கள் சிரமம் இல்லாமல் சுவாமியை வழிபட, கோவில் நிர்வாகத்தினர், தடுப்புகள் அமைத்திருந்தனர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பவானி ஆற்றின் கரையோரம், பலர் ஏழு கன்னிமார் கல் சிலைகள் வைத்து பூஜை செய்தனர். குடும்பத்தில் இறந்த கன்னிப் பெண்களை, நினைவு கூறும் வகையில், அவர்களுக்கு பிடித்தமான உணவுப் பொருட்களையும், புதிய துணிகளையும், இலையில் படையல் வைத்து, சூடம் ஏற்றி வழிபட்டனர். பின்பு புதிய துணிகளை அங்கிருந்தவர்களுக்கு கொடுத்தனர்.


புதிதாக திருமணம் ஆன தம்பதியர், ஆற்றின் கரையோரம், தாலி கயிறு மாற்றி, சூடம் ஏற்றி வழிபட்டனர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்தனர். மதியம், 12:00 மணியளவில் ஒரே நேரத்தில் அதிகமான வாகனங்கள் வந்ததால், கோவில் அருகே, நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல், ஒவ்வொரு ரோட்டிலும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. பக்தர்கள் வீட்டிற்கும், கோவிலுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், காவல் தெய்வமான கன்னிமார் அம்மன், கருப்பராயன், கல்கத்தா காளி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர். மேட்டுப்பாளையம் ஊமப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, குண்டத்து காளியா தேவி மற்றும் பூதேவி கோவில் உள்ளது. இங்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஊமப்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து, காளியாதேவி கோவிலுக்கு, கஞ்சி கலைய ஊர்வலம் எடுத்து வந்தனர். பின்பு அம்மனுக்கு அபிஷேகம் முடிந்து அலங்கார பூஜை செய்தனர். ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !