உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடித்துாரி திருவிழா துவக்கம்; பாரம்பரியம் மறவாத கிராமம்

ஆடித்துாரி திருவிழா துவக்கம்; பாரம்பரியம் மறவாத கிராமம்

உடுமலை: உடுமலை அருகே பில்லவநாயக்கன்சாளையூரில், பாரம்பரிய ஆடித்துாரி திருவிழா முளைப்பாரி ஊர்வலத்துடன் துவங்கியது.


உடுமலை எரிசனம்பட்டி பில்லவநாயக்கன்சாளையூரில், ஆடித்துாரி திருவிழா பாரம்பரிய கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு நாளில் துவங்கி, மூன்று நாட்கள் முதல் ஒன்பது நாட்கள் வரை நடக்கிறது. இவ்விழாவுக்காக கிராம பொது இடத்தில், ஆடித்துாரி எனப்படும், ஊஞ்சல் அமைக்கப்பட்டு, முளைப்பாலிகை ஊர்வலத்துடன் திருவிழா துவங்கியது. 


கிராம மக்கள் கூறியதாவது: ‘ஆடித்தூரி’ திருவிழா பாரம்பரிய முறையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குழந்தை பாக்கியம் வேண்டி, இறைவனிடம் நேர்த்திக்கடன் செலுத்திய முன்னோர்களின் நம்பிக்கையின் அடையாளமாக உருவான இவ்விழா, இன்றளவும் மக்களின் ஆழ்ந்த பக்தியுடனும் மரபு மாறாமலும் தொடர்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பே மக்காச்சோளம், ராகி உள்ளிட்ட தானியங்களால் முளைப்பாரி வளர்க்கப்பட்டு, விழா நாளில் பக்தர்கள் தேங்காய், பழம், அவல், பொங்கல் உள்ளிட்ட படையல்களுடன் வழிபாடு நடத்துகின்றனர். இரு உயரமான மரங்களால் அமைக்கப்படும் பாரம்பரிய துாரியில், முதலில் ஏழு கன்னிப் பெண்கள் அமர்ந்து விழாவைத் தொடங்கி வைப்பர். பின்னர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் துாரியில் ஊஞ்சலாடி மகிழ்கின்றனர். மூன்று முதல் ஒன்பது நாட்கள் வரை நடைபெறும் இந்த துாரி, கிராம மக்களின் ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் பாரம்பரியத்தின் உயிரோட்டமாக திகழ்கிறது. உடுமலை சுற்றுவட்டாரத்தின் ஒரு சில கிராமங்களில் மட்டுமே, இன்றளவும் உயிர்ப்புடன் தொடரும் இந்த அரிய பண்பாட்டு மரபு, பாரம்பரியம், விவசாய நாகரிகம் மற்றும் சமூக ஒற்றுமையை தலைமுறைகள் கடந்தும், பாதுகாத்து வரும் அரிய அடையாளமாக விளங்குகிறது. இத்தகைய பாரம்பரிய விழாக்களைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது காலத்தின் அவசியமாகும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !