உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா தொடக்கம்; இன்று ஆடி பரணி

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா தொடக்கம்; இன்று ஆடி பரணி

திருத்தணி: முருகன் கோவிலில், நேற்று ஆடி கிருத்திகை விழா, ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, மூலவரை தரிசித்தனர்.


திருத்தணி முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, நேற்று ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. அதிகாலை 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்க கல், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி – தெய்வானையுடன், மலைப்படிகள் வழியாக சரவண பொய்கை திருக்குளத்திற்கு வந்து, மூன்று முறை குளத்தை சுற்றி வலம் வந்தார். உற்சவர் முருகப்பெருமான் மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்ற பின், மூலவருக்கு மீண்டும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆடி அஸ்வினியில் திரளான பக்தர்கள் காவடிகளுடன் வந்து, பொது வழியில் இரண்டரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.


இன்று ஆடி பரணி: இன்று ஆடி பரணியும், நாளை ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழாவும் நடக்கிறது. மேலும், வரும் 7ம் தேதி இரண்டாம் நாள் தெப்பமும், 8ம் தேதி மூன்றாம் நாள் தெப்பத்துடன் ஆடி கிருத்திகை விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்காவலர் குழுத்தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சாய் பிரணீத் தலைமையில், 2,250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !