உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. ஆக.14ல் ஆடிப்பூரத் தேரோட்டம் நடக்கிறது.


108 வைணவ தலங்களில் ஒன்றானதும், தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை கொண்ட ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆண்டு தோறும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் இன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை கொடி பட்டம் மாட வீதிகள் மற்றும் ரத வீதிகள் சுற்றி கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது அங்கு கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 10:02 மணிக்கு கவுதம் கிருஷ்ண பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்தனர். இதனைத் தொடர்ந்து தினமும் காலையில் ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம் எழுந்தருளும், இரவு வீதியுலாவும், தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை ஆடிப்பூர பந்தலில் ஆன்மீக சொற்பொழிவுகள், இன்னிசைக்கச்சேரிகள் நடக்கிறது. 


ஐந்தாம் திருநாளான ஆக. 10 காலை 10:00 மணிக்கு பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு 10:00 மணிக்கு 5 கருட சேவையும், ஏழாம் திருநாளான ஆக. 12 இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள், ரெங்க மன்னார் சயனசேவையும், ஒன்பதாம் திருநாளான ஆக. 14 காலை 8:45 மணிக்கு திருத்தேரோட்டமும், ஆக. 17 மாலை 6:00 மணிக்கு புஷ்பயாகமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !