காளஹஸ்தி விக்ஞானமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழா
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான விக்ஞான மலை மீது வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம், ஆடி கிருத்திகை விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு இன்று காலை சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து உற்சவ மூர்த்திகள் நான்கு மாட வீதிகளில் இந்திர விமான வாகனத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர். முன்னதாக விக்ஞான மலை மீதுள்ள கோயிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் பூ காவடி எடுத்து வந்து தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்தினர். கோயிலுக்கு அருகில் உள்ள நாரதர் புஷ்கரணியில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி, புனித நீராடி முருகனை வழிபட்டனர். விக்ஞான மலை அடிவாரத்தில் சிவன் கோயில் சார்பில் அதிகாரிகள் சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்களை வழங்கினர்.