பழநி முருகன் கோயிலில் ஆடி கார்த்திகை; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
பழநி; பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி கோயிலுக்கு வருகை புரிந்தனர். அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை, ஆறு கால பூஜையில் நடைபெற்றது. உள்ளூர்,வெளியூர், வெளி மாநில பக்தர்கள் படிப்பாதை, வின்ச் மூலம் கோயில் சென்றனர். பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்ததால் குடமுழுக்கு மண்டபம் வழியாக பக்தர்கள் மலைக்கோயில் செல்ல படிப்பாதையில் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் மலர் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்தனர். ரோப்கார் பராமரிப்பு பணி காரணமாக செயல்படவில்லை. வின்ச் ஸ்டேஷனில் நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.
முருகன் கோயிலில் மாலை நேரத்தில் குத்து விளக்கு பூஜை திருக்கல்யாணம் மண்டபத்தில் நடந்தது. சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடந்தது. வெளி பிரகாரத்தில் தங்கரத புறப்பாட்டில் சின்னகுமாரசுவாமி எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தங்கரத புறப்பாட்டில் பங்கேற்றனர். இன்றும் கார்த்திகை நட்சத்திரம் தொடர்வதால் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கார்த்திகை விரதம் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்தனர்.