செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்
திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், ஆடி கிருத்திகை விழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தை, மாசி, சித்திரை, ஆடி மாதங்களில் வரும் கிருத்திகை விழா விமரிசை யாக கொண்டாடப்படுகிறது. ஆடி கிருத்திகை விழாவையொட்டி, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
சிறப்பு அலங்காரம் பின், சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனைகளும் நடந்தன. விழாவில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள், காவடி எடுத்தும், அலகு குத்தியும், முடி காணிக்கை செலுத்தியும் வேண்டுதல்களை நிறைவேற்றினர். தொடர்ந்து, இரவு 7:00 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கந்தபெருமான், மாடவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், செங்கல்பட்டு எஸ்.பி., அய்மன் ஜமால் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மறைமலை நகர் சிங்கபெருமாள் கோவில் ரயில்வே ஸ்டேஷன் தெருவில் பழமையான சிங்கை சிங்கார வேலன் கோவிலில், நேற்று காலை 7:00 மணிக்கு, அனுமந்தபுரம் சாலையில் உள்ள குளக்கரையில் இருந்து 108 பால்குட ஊர்வலம் புறப்பட்டு, காலை 8:30 மணிக்கு கோவிலில் வந்தடைந்தது. காலை 10:30 மணிக்கு அக்னி சட்டி நிகழ்ச்சியும், சிங்கார வேலனுக்கு மிளகாய் பொடி அபிஷேகமும், மஞ்சள் இடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடர்ந்து, சடல் சுற்றுதல், ஆகாய மாலை போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றன. ஆகாய மார்க்கத்தில் வந்த பக்தர்கள், உற்சவருக்கு மாலை அணிவித்து வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து, 108 வேல் குத்துதல், உரல் இழுத்தல், காவடி எடுத்தல், ஆட்டோ இழுத்தல், தீமிதித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மறைமலை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள செல்வமுத்துகுமாரசுவாமி கோவிலில், நேற்று காலை 9:00 மணிக்கு 108 பால்குடம் எடுக்கப்பட்டது. பின், சந்தன காப்பு அலங்காரத்தில் செல்வ முத்துகுமாரசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.