மேலவல்லம் பிரத்தியங்கிரா தேவி கோவில் நிகும்பலா யாகம்
மயிலாடுதுறை: மேலவல்லம் பிரத்தியங்கிரா தேவி கோவில் ஆடி அமாவாசை நிகும்பலா யாகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலவல்லம் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை தோறும் நடைபெறும் நிகம்பல யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தால் பாவ, சாப தோஷங்கள் மற்றும் சத்துரு உபாதைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெறுவர் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் சன்னதி முன்பு அரச மரத்தடியில் பிரத்தியங்கிரா தேவியை கலசத்தில் எழுந்தருள செய்து நிகும்பலா யாகம் நடைபெற்றது. யாக குண்டத்தில் மூலிகைகள், பழங்கள், மலர்கள் மற்றும் மிளகாய் வற்றல் சேர்க்கப்பட்டு, பூர்ணாகுதி மகா தீபாராதனை நடந்தது. பின்னர் யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரத்தியங்கிரா தேவியை மனமுருக பிரார்த்தனை செய்தனர். பூஜை மற்றும் தியாகத்தை நாராயணன் குருக்கள் செய்து வைத்தார். யாகத்திற்கான ஏற்பாடுகளை அமமுக மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் தலைமையிலானோர் செய்திருந்தனர்