மதுரை மீனாட்சி கோயிலில் நாளை ஏற்றி இறக்கும் வைபவம்; 3 மணி நேரம் தரிசனம் கிடையாது
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை(ஆக.14) ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு ஏற்றி இறக்கும் வைபவம் நடக்கிறது. இதையொட்டி காலை 8:00 முதல் 11:00 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதி இல்லை.
மீனாட்சி கோயிலில் தற்போது சிவபெருமானின் திருவிளையாடல்களை நடத்திக் காட்டும் ஆவணி மூலத்திருவிழா நடக்கிறது. இதன் ஒருபகுதியாக ஆடிப்பூரத்தை முன்னிட்டு நாளை மூலவர், உற்ஸவ அம்மனுக்கு ஏற்றி, இறக்கும் வைபவம் நடக்கிறது. ஆடிப்பூரம் நட்சத்திரத்தில் அம்மன் பருவம் அடைந்ததாக ஐதீகம். மதுரையில் பாண்டிய மன்னரின் மகளாக பிறந்த அம்மனுக்கு ‘மானிடப் பெண்’ என்ற அடிப்படையில், ஆடிப்பூரத்தன்று பூப்புனித சடங்கு நடத்துவது வழக்கம். நாளை மூலஸ்தான அம்மனுக்கு இச்சடங்கு நடக்கிறது. காலை 8:00 மணிக்கு மேல் மூலவருக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் நடக்கும். பிறகு ஏற்றி இறக்குதல் சடங்கு நடக்கும். உற்ஸவ அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி மூன்று முறை மேலும், கீழுமாக இறக்குவர். பருவமடைந்த அம்மனுக்கு திருஷ்டி கழிப்பதற்காக இந்த சடங்கு செய்யப்படும். உற்ஸவ அம்மனுக்கு ஏதாவது ஒரு சாதம் நிவேதமாகப் படைக்கப்படும். அம்மன் பாதத்தில் முறத்தில் சட்டைத்துணி, குங்குமச் சிமிழ், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்யம் வைத்து பூஜை செய்யப்படும். இந்நிகழ்வையொட்டி நாளை காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை அம்மன் சன்னதியில் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.