மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்.,11ல் துவக்கம்
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நவராத்திரி விழா நடைபெறும் 10 நாட்களும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணிவரை மீனாட்சி அம்மன், மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும்.அப்போது பக்தர்களுக்கு தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடைபெறாது. மேலும், 25ம் தேதியன்று சாந்தாபிஷேகம் நடைபெறும். நவராத்திரி உற்சவ நாட்களில் மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாத்துதல், தங்ககவசம் சாத்துதல், உபயதிருக்கல்யாணம் மற்றும் தங்கரதம் உலா நடைபெறாது. நவராத்திரி உற்சவ நாட்களில் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்குத் தான் தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மன் அலங்காரம்: விழாவில் வரும் 11 ம் தேதி இராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், பட்டாபிஷேக திருக்கோலம், 12 ம் தேதி அர்த்தநாரீ்ஸ்வரர் அலங்காரமும், 13 ம் தேதி கோலாட்டம், 14ம் தேதி பட்டாபிஷேக திருக்கோலம், 15 ம் தேதி தபசு திருக்கோலம், 16ம் தேதி ஊஞ்சல் , 17 ம் தேதிமுத்தங்கி சேவை, 18 ம் தேதி மஹிஷாசுரமர்த்தினி, 19 ம் தேதி சிவ பூஜை என ஒவ்வொரு நாளும் கொலு மண்டபத்தில் மீனாட்சியம்மன் பல்வேறு கோலத்தில் அருள்பாலிப்பார்.
அக் 11 ம் தேதி முதல் 20 ம் தேதிவரை கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் ஆன்மீகச் சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை மற்றும் வீணை இசைக் கச்சேரி, போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. கொலுச்சாவடியில் கொலு அலங்கார பொம்மைகள் உபயமாக வழங்குபவர்கள், சிவப்பெருமானின் 64 திருவிளையாடல்கள் சம்பந்தமான மற்றும் இதர பொம்மைகளை உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.