உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூரில் கூடுதல் அடிப்படை வசதிகள் தேவை; சாலை ஓரம் தூங்கும் பக்தர்கள்

மேல்மலையனூரில் கூடுதல் அடிப்படை வசதிகள் தேவை; சாலை ஓரம் தூங்கும் பக்தர்கள்

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு ஆடி அமாவாசைக்கு வந்த பக்தர்கள் அடிப்படை வசதி இன்றி அவதிப்பட்டனர். ஆயிரக்கணக்காணவர்கள் பாதுகாப்பின்றி சாலை ஓரம் படுத்து தூங்கினர்.


தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மீக ஸ்தலங்களில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அமாவாசை, மாசி தேர் திருவிழா, ஆடி வெள்ளி போன்ற நாட்களில் லட்சக்கணக்கில் வருகின்றனர். நேற்று முன்தினம் ஆடி அமாவாசை தினத்தன்று அதிகாலை முதல் கூட்டம் அலை மோதியது. நள்ளிரவு வரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்திருந்தனர்.


பெண்கள் அவதி: பக்தர்கள் அதிகம் வந்ததால் போதிய கழிப்பறை வசதி இல்லாமல் இருந்தது. இருக்கும் கழிவறைகளில் நவீன வசதிகள் இல்லை. அத்துடன் சுத்தமாகவும் பராமரிகாததால் பெண்கள் அவதிப்பட்டனர். இதனால் பாதுகாப்பு இல்லாத ஏரி, வயல்வெளிகளை தேடி சென்றனர். எனவே, கோவில் அருகில் மட்டுமின்றி கோவிலுக்கு வரும் வழியில் முக்கிய சாலைகளில் கூடுதலாக நவீன கழிப்பறைகள் அமைத்து, சுத்தம் செய்ய தனி பணியாளர்களை நியமிக்க வேண்டும்.


குடிநீர் வசதி: வெயில் வாட்டி எடுத்த நிலையில் நீண்ட நேரம் வரிசையில் நின்ற பக்தர்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்க வில்லை. மாலை 5 மணியில் இருந்து ஊஞ்சல் மண்டபம் முன்பு 25 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். இவர்கள் இரவு 12 மணி வரை காத்திருந்தனர். இவர்களுக்கு போதிய குடிநீர் வழங்க வில்லை. இந்த கூட்ட நெரிசலில் 30 வயது பெண் பக்தர் ஒருவர் ஊஞ்சல் நடந்த போதே மயங்கி விழுந்தார். 


சாலை ஓரம்படுத்து தூங்கிய பக்தர்கள்: அமாவாசை நாட்களில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களில் ஒரு பகுதியினர் விடியும் வரை இங்கு தங்குகின்றனர். இவர்களுக்காக பெரிய அளவிளான தங்கும் வளாகம் இல்லை. இதனால் பக்தர்கள் உயிருக்கும், உடமைக்கும் எந்த பாதுகாப்பும் இன்றி சாலை ஓரம் படுத்து தூங்கினர். சாலை ஓரம் படுத்து தூங்கியவர்கள் மீது கடை நடத்துபவர்கள் தண்ணீரை ஊற்றினர், ஆபாச வாத்தையால் திட்டினர். இந்த அவலம் போலீசார் முன்னிலையிலேயே அரங்கேறியது.  எனவே பத்தர்கள் தங்குவதற்கு பெரிய அளவில் மண்டபங்களை பெண்களுக்கு தனியாகவும், குடும்பத்தினருக்கு தனியாகவும் அமைக்க வேண்டும். 


ஸ்தம்பித்த போக்குவரத்து: விழா நாட்களில் கார், வேன்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் சிறப்பு பஸ்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருகின்றன. இவற்றை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லை. 70 சதவீதம் வாகனங்களை சாலை ஓரம் நிறுத்துகின்றனர். நேற்று ஊஞ்சல் முடிந்து இரவு 12 மணிக்கு ஒரு பகுதி பக்தர்கள் வீட்டுக்கு புறப்பட்டனர். அதே நேரம் புதிதாக ஆயிரக்கணக்கான பக்கர்கள் எதிர் திசையில் கோவிலுக்கு வந்தனர். இரண்டு பக்கமும் வாகனங்கள் வந்ததால் வளத்தி ரோடு, வடபாலை ரோடு, அவலூர்பேட்டை ரோட்டில் நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக வடபாலை சாலையில் அதிகாலை 3 மணிவரை போக்குவரத்து நெரிசல் நீடித்தது. நிரந்தர தீர்வாக கோவிலுக்கு வரும் சாலைகளில் பெரிய அளவில் பாக்கிங் வசதி செய்ய வேண்டும்.


மருத்துவ வசதி: பெரும் கூட்டம் கூடும் நாட்களில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல்நல குறைவு ஏற்படுகிறது. ஏற்கனவே விழா நாட்களில் பலர் இறந்துள்ளனர். நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடந்த இடத்தில் மயங்கி விழுந்து பெண்ணை கொண்டு செல்ல ஸ்டெக்சரோ, முதலுதவி அளிக்க மருத்துவ குழுவோ அங்கு இல்லை. ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் அந்த பெண்ணை மருத்துவ முகாமுக்கு கைகளால் தூக்கி சென்றனர். இதே போல் பலருக்கும் நேற்று முன் தினம் மருத்துவ உதவி தேவைப்பட்டது. எனவே ஊஞ்சல் நடக்கும் இடத்தில் முதலுதவி குழுவினர் ஸ்டெரக்சர் வசதியுடன் இருக்க வேண்டும். அத்துடன் கோவில் வளாகம் மட்டுமின்றி மொபைல் மருத்துவ குழுவை எல்லா முக்கிய சாலைகளிலும் நிறுத்த வேண்டும்.


சாலைகளில் கூடுதல் போலீஸ் தேவை: விழாக்களின் போது 500 முதல் 1000 போலீசாரை குவிக்கின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் கோவில் வளாகத்திலேயே நிறுத்தப்படுகின்றனர். இவர்கள் வி.ஐ.பி., பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர். முக்கிய சாலைகளில் போக்குவரத்தை சரி செய்ய குறைந்த எண்ணிக்கையில் போலீசாரை நியமிக்கின்றனர். நேற்று வடபாலை சாலையில் போலீசார் குறைவாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 3 மணி நேரம் பக்தர்கள் நெரிசலில் அவதிப்பட்டனர்.


நிராந்தர திட்டங்கள் தேவை: பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்ட நிலையில் அதற்கு ஏற்ப அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும். இந்து சமய அறநிலைத்துறையும், அரசும் இதில் கவனம் செலுத்தி பெரிய அளவிலான நிரந்தர திட்டங்களை செயல் படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !