உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி மாத விழாவிற்காக காத்திருக்கும் பக்தர்கள்

ஆடி மாத விழாவிற்காக காத்திருக்கும் பக்தர்கள்

அசைந்தாடி வரும் அழகுத் தேர்

ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போது, நான்கு ரத வீதிகளிலும் தேரானது கம்பீரமாக அசைந்தாடி வரும் காட்சி நெஞ்சை நெகிழ வைக்கும். தேரின் மீது உற்சவ அம்மன் பேரழகோடு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வீதியெங்கும் திரண்டு நிற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மாலை சார்த்தியும் காணிக்கை செலுத்தியும் அம்மா செங்கழுநீரி என விண்ணை முட்டும் அளவிற்கு கோஷமிட்டு அம்மனை வழிபடுவர்.

களிப்பூட்டும் தெப்பத் திருவிழா

தேர் நிலைக்கு வந்ததும், அம்மனுக்குச் சர்வ அலங்காரம் செய்யப்பட்டு கோவிலுக்குள் எழுந்தருளச் செய்வர். அன்று மாலை, பக்தர்களுக்குக் கஞ்சி வார்த்தல் வெகு விமர்சையாக நடைபெறும். அதனைத் தொடர்ந்து, வண்ணமயமாக மஞ்சள் நீராட்டு விழா கோலாகலமாக நடக்கும்.

மஞ்சள் நீராட்டிற்குப் பின், அம்மனைச் சயன கோலத்தில் அற்புதமாக அலங்கரித்து, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். விடிய விடிய, அதிகாலை 4:00 மணி வரை நடைபெறும் இந்தத் தெப்பத் திருவிழாவில், குளத்து நீரில் அம்மன் மிதந்து வரும் காட்சி அற்புதமானது.

முத்து பல்லக்கில் ஜொலிக்கும் அம்மன்

தெப்பத் திருவிழா நிறைவடைந்த பின் வரும் 6ம் நாள் செங்கழுநீரம்மன் கண்ணைக் கவரும் முத்துப் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இயற்கை எழில் கொஞ்சும் சூழலில், தன் அருளாலும் அற்புதங்களாலும் பக்தர்களைக் காத்து நிற்கும் வீராம்பட்டினம் செங்கழுநீரம்மனின் அருளைப் பெற புதுச்சேரி மக்கள் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தை ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !