ஆடி கடைசி வெள்ளி, மடப்புரத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று. இங்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதுவது வழக்கம் இன்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மதியம் ஒரு மணி உச்சி கால பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். உச்சிக்கால பூஜைக்காக அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. ஏழு வித தீபாராதனை காட்டப்பட்ட பின் பக்தர்களுக்கு எலுமிச்சம்பழம் பிரசாதம் வழங்கப்பட்டது. கோயிலில் பக்தர்களுக்கு குடிநீர்,மின்விசிறி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. போலீசார் கோயில் வாசல், கோயில் வளாகம் உள்ளிட்டவற்றில் பக்தர்களுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதனால் பக்தர்கள் நெரிசலின்றி அம்மனை தரிசனம் செய்து சென்றனர். ஆனால் மடப்புரம்,வடகரை விலக்கு உள்ளிட்ட இடங்களில் போலீசார் இல்லாததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் ஒன்றையொன்று முந்த முயன்றதால் டூவீலர் கூட செல்ல முடியவில்லை. 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.