12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக பெருவிழா; விருத்தாசலம் மணிமுக்தாற்றில் கோலாகலம்
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக பெருவிழா விமர்சையாக நடந்தது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் 2,500 ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்த சுந்தரமூர்த்திகள் சுவாமிகள், சுவாமியை நினைத்து மனமுருகி பதிகம் பாடுகிறார். இதில் மெய்சிலிர்த்த விருத்தகிரீஸ்வரர் சுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமிக்கு 12 ஆயிரம் பொற்காசுகளை பரிசளிக்கிறார். அவர், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலுக்கு செல்ல வேண்டிய நிலையில், பொற்காசுகளை எடுத்துச் செல்ல அச்சமடைந்தார். உடன், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள மாற்றுரைத்த விநாயகரிடம் வேண்டியதும், மணிமுக்தாற்றில் பொற்காசுகளை இட்டு, திருவாரூர் கமலாலய திருக்குளத்தில் எடுத்துக் கொள்ளுமாறு அருளுகிறார். அதுபோல், கமலாலய திருக்குளத்தில் நீராடி, பொற்காசுகளை எடுத்துக் கொண்டார், சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதனால், உலகின் முதல் ஏ.டி.எம்., என மணிமுக்தாறு என்ற ஆன்மிக வரலாறும் உள்ளது.
இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில், விருத்தாசலம் முதுகுன்றா வழிபாடு மற்றும் திருக்கயிலாய வாத்திய திருக்கூட்டம் சார்பில் வரலாற்று பெருவிழா நேற்று நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி வேள்வி வழிபாடு, தரும விடைகொடி வழிபாடு, காலை நம்பியாரூராருக்கு 21 வகையான பெருந்திருமஞ்சனம், மாலை சுவாமிகளிடம் இன்ப தமிழால் பதிகம்பாடி 12 ஆயிரம் பொற்காசுகள் பெறும் நிகழ்வு நடந்தது. பின்னர், 108 கயிலாய வாத்தியங்களுடன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். இரவு மணிமுக்தாற்றில் மாற்றுரைத்த விநாயகர் துணையுடன் 12 ஆயிரம் பொற்காசுகளை இடும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. சிவனடியார்கள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.