மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்
அன்னூர்: அன்னூர் லக்கேபாளையம் கிராம மக்கள் மழை வேண்டி பஞ்ச கல்யாணிக்கு (கழுதைகள்) திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து, ஈரோடு மாவட்டம், நல்லூரிலிருந்து, ஆண் மற்றும் பெண் கழுதைகள்
வரவழைக்கப்பட்டன. நேற்று, காலை ஆண் கழுதைக்கு பட்டு வேட்டியும், பெண்
கழுதைக்கு பட்டுச்சேலையும் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.
எல்.கோவில்பாளையம், விநாயகர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கழுதைகள்
ஊர்வலமாக மேளதாளத்துடன் லக்கேபாளையம் சுப்பிரமணியர் கோவிலுக்கு அழைத்து
வரப்பட்டன. அங்கு பூசாரி நாச்சிமுத்து கழுதைகளுக்கு திருமணம் நடத்தி
வைத்தார். பொதுமக்கள் கழுதைகளுக்கு அட்சதை தூவி வாழ்த்தினர்.
ஊர்
பெரியவர் காளிச்சாமி கூறுகையில், "இக்கோவில், 200 ஆண்டு பழமையானது. இரண்டு
ஆண்டுகளுக்கு முன்பும், இதுபோல் மழை வேண்டி பஞ்ச கல்யாணி திருமணம்
செய்தோம். மழை பெய்தது," என்றார். கழுதைகளின் திருமணத்துக்கு கிராம மக்கள்
மொய் எழுதினர். மொத்தம் ரூ.19 ஆயிரத்து 600 மொய் பணம் வசூல் ஆனது.