காஞ்சியில் 16ம் நுாற்றாண்டு சதிக்கல் சிற்பம் கண்டெடுப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில், சென்னை துாய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் அன்பழகன், நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அண்ணாமலை நகர் அருகில் சதிக்கல் சிற்பம் ஒற்றை கண்டறிந்தார்.
இதுகுறித்து உதவி பேராசிரியர் அன்பழகன் கூறியதாவது: கிழக்கு திசை நோக்கி, மண் தரையில் ஊன்றிய நிலையில் 44 செ.மீ., உயரமும், 38 செ.மீ., அகலமும் கொண்ட இந்த சதிக்கல் சிற்பத்தில், ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் உருவங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இருவரும் பட்டாடை அணிந்துள்ள நிலையில் காது, கழுத்து, மார்பு, தோள்கள், கைகள் மற்றும் கால்களில் அணிகலன்கள் அணிந்துள்ளனர். தற்போது கன்னியம்மனாக வழிபாட்டில் இருக்கும் இச்சதிக்கல் சிற்பத்தின் காலம், கி.பி., 16ம் நுாற்றாண்டாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.