விக்கிரமங்கலம் சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
அரியலூர்: விக்கிரமங்கலம் சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், கோலாகலமாக பிப்.1 நடந்தது.அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, விக்கிரமங்கலம் கிராமத்தில், பூர்ணசந்திர கலாம்பிகை உடனமர் சோழீஸ்வரர் கோவில் உள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழன் காலத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, இக்கோவில் மகா மண்டபத்தின் கூரையில், வேறு எந்த கோயிலிலும் காணமுடியாத வகையில், ராசி மண்டல சிற்பங்கள் அமைந்துள்ளது. அந்த ராசி மண்டலத்தில், 12 ராசிக்குறிய ராசி சிற்பமும், அதற்குறிய தெய்வங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் மத்தியில் சூரியனும், சூரியனுக்கு நடுவில் நவகிரஹங்களின் மூர்த்தியாகிய, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியுள்ளார்.வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலின் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணி, கடந்த, 1972ம் ஆண்டு கிருபானந்தவாரியாரை தலைவராக கொண்டு துவக்கப்பட்டதாக, அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.
இடையில் நின்று போன திருப்பணி, கோவை வசந்தகுமார் வழிகாட்டுதல்படி, கடந்த ஓராண்டுக்கு முன்பு துவங்கி, ராஜகோபுரம், ஸ்வாமி அம்பாள் சன்னிதி உள்ளிட்ட பல இடங்களிலும் திருப்பணி நடந்தது. தொடர்ந்து பிப்.1 காலை ராஜகோபுரம், ஸ்வாமி அம்பாள் மற்றும் சுப்ரமணியஸ்வாமி சன்னதி உள்பட கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும், திருவிடைமருதூர் மணிகண்டசிவம் தலைமையிலான சிவாச்சாரியார் கும்பாபிஷேகம் செய்தனர்.பக்தி சிரத்தையுடன் நடந்த இக்கும்பாபிஷேக விழாவில், பல்வேறு முக்கிய ஆலயங்களின் மடாதிபதிகள், அரியலூர் கலெக்டர் செந்தில்குமார், உடையார்பாளையம் ஆர்.டி.ஓ., கஸ்தூரி, ஜெயங்கொண்டம் தாசில்தார் சீனிவாசன், திருச்சி இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை கமிஷனர் இளம்பரிதி, அரியலூர் துணை கமிஷனர் கோதண்டராமன், கோவில் நிர்வாக அலுவலர்கள் நித்யா, மணி, திருப்பணிக்குழு உறுப்பினர்கள் முருகேசன், குணசேகரன், மணிவண்ணன், முருகன், அரியலூர் தங்கவேலு மற்றும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.