மிலாடி நபியை முன்னிட்டு மின்னொளியால் ஜொலிக்கும் ஏர்வாடி தர்கா
கீழக்கரை; மிலாடி நபி என்பது இஸ்லாமியர்களின் இறுதி தூதரான முகம்மது நபி அவர்களின் பிறந்தநாளை குறிக்கும் புனித பண்டிகை ஆகும். இது இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் 12வது நாளில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகள் பற்றி சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படுகின்றன. ஏழைகளுக்கு உணவு வழங்குதல் மற்றும் தர்ம காரியங்கள் உள்ளிட்டவைகள் செய்யப்படுகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஒற்றுமை வெளிப்படுத்தப்படுகிறது. மிலாடி நபி விழா வருகிற ஆக., 26 அன்று புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஏர்வாடி தர்கா மற்றும் பள்ளிவாசல்கள் அலங்கார நுழைவாயில் பகுதி உள்ளிட்ட இடங்களில் மின்னொளியால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஏர்வாடியில் இருந்து ஏர்வாடி தர்கா வரை மிலாடி நபி தினத்தன்று 800 மதரசா மாணவர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் மூலமாக உலக நன்மைக்கான சிறப்பு துவா ஓதி ஊர்வலம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடு தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்து வருகின்றனர்.