காரனோடை அதிசய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
சோழவரம்: காரனோடை அதிசய விநாயகர் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
சோழவரம் அடுத்த காரனோடையில், பிரசித்தி பெற்ற அதிசய விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புனரமைப்பு பணி மேற் கொள்ளப்பட்டு வந்தது.
அப்பணி முடிந்த நிலையில், கும்பாபிஷேக விழா தொடங்கியது. 20ம் தேதி, கிராம தேவதை வழி பாட்டுடன், விநாயகருக்கு அர்ப்பணம் செய்தல், கணபதி ஹோமம், கோபூஜை, யாகசாலை, சாந்தி ஹோமம், அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.
விழாவின் மூன்றாம் நாளான நேற்று, காலை 6:00 மணிக்கு, யாக பூஜை, யாத்ரா தான சங்கல்பம், தீபஆராதனை, கடம் புறப்பாடு ஆகியவை நடந்தன.
தொடர்ந்து, 9:00 மணிக்கு சிவாச்சாரியர் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன் அதிசய விநாயகர் மூலவர் சன்னிதி மற்றும் விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
தொடர்ந்து, பவானி துர்க்கை, ஆஞ்சநேயர், பாலமுருகன், அய்யப்பன், நவகிரகங்கள் சன்னிதிகளுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. கூடியிருந்த பக்தர்கள் நெஞ்சுருக விநாயக பெருமானையும், பரிவார தேவதை களையும் வணங்கி வழி பட்டனர்.
மாலையில், விநாயக பெருமான் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.