அச்சிறுபாக்கம்: வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே ராமாபுரம் அடுத்த பாதிரி கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது.
அச்சிறுபாக்கம் அருகே பாதிரி கிராமத்தில் பழமையான பூமி நீளா பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தன.
திருப்பணிகள் அனைத்தும் முடிவுற்று, ஆக., 23ல், மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இம்மாதம் 19 ல், யாகசாலை பூஜைகள் தொடங்கின. 20ல், தீர்த்த சங்க்ரஹணம், உற்சவர் கடங்கள் யாகசாலை பிரவேசமும், 21ல் , தோரண கும்ப பிம்ப அக்னி மண்டலம் முதலான சதுஸ்தான ஆராதனங்கள், மூலவர், பெருமாள், தாயார்,ஆண்டாள் திருமஞ்சனம், 22 ல், வேத திவ்ய ப்ரபந்த பாராயணம் நடந்தது.
முக்கிய நிகழ்வாக, நேற்று காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜை, விஸ்வரூப சேவை நடந்தது.
பின், 10:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். மாலை 5:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா மற்றும் வான வேடிக்கை கோலாகலமாக நடந்தது.