எமனேஸ்வரம் சீனிவாச பெருமாளுக்கு 108 கலச அபிஷேகம்; சுவாமி வீதியுலா
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அருள் பாலிக்கும் சீனிவாச பெருமாளுக்கு 108 கலச அபிஷேகம் நடந்தது. கோயிலில் தனிச் சன்னதியில் அலர்மேலுமங்கா, பத்மாவதி தாயார் உடன் சீனிவாச பெருமாள் அருள் பாலிக்கிறார். தொடர்ந்து 33வது ஆண்டு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதன்படி காலை 7:00 மணி தொடங்கி அணுக்கை, விஸ்வக்சேன பூஜைகள், யாகம் நடந்தது. 9:30 மணிக்கு மகா பூர்ணாகுதி நடந்து, தீர்த்த குடங்களை அர்ச்சகர்கள் எடுத்து வந்தனர். பின்னர் பல்வேறு திரவியங்கள், சந்தனம், பால், பன்னீர் ஆகிய அபிஷேகம் நடந்து, 108 கலசங்களில் இருந்து புனித நீர் பெருமாளிடம் சேர்க்கப்பட்டது. மகா தீப ஆராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலை 6:30 மணிக்கு சீனிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் சேஷ வாகனத்தில் வீதி உலா வந்தார். விழா குழுவினர், எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.