அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைமை அதிகாரியாக ஜிதேந்திரா மிஸ்ரா நியமனம்
அயோத்தி : அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளைக்கு புதிதாக மூன்று உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.அறக்கட்டளை தலைமை அதிகாரியாக ஜிதேந்திரா மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்களின் காணிக்கைகளில் முறைகேடு என எழுந்த புகார்களை தொடர்ந்து, 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.அதில் உண்டியல் காணிக்கை எண்ணும் மையத்தில் இருந்த தற்காலிக ஊழியர்கள், முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.அதே நேரத்தில் இனி முறைகேடுகள் நடக்காமல் இருக்க, புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டன.
அறக்கட்டளை வட்டாரங்களின்படி, தலைமை நிர்வாக அதிகாரியைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக் குழு, அப்பதவிக்கான மூன்று பேர் கொண்ட பட்டியலை ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது. தேர்வுக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி, அறக்கட்டளையின் மற்ற உறுப்பினர்கள் முன்னிலையில், இப்பட்டியல் குறித்த அறிக்கையை அறக்கட்டளைப் பொருளாளர் மஹந்த் கோவிந்த் தேவ் கிரியிடம் ஒப்படைத்தார்.
இப்பதவிக்கு மொத்தம் 5,585 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பதாரர்களை மதிப்பிடுவதற்கான பல்வேறு அளவுகோல்களை உள்ளடக்கிய, 600 மதிப்பெண்கள் கொண்ட ஒரு கூகுள் படிவத்தை தேர்வுக் குழு தயாரித்திருந்தது. இத்தேர்வுச் செயல்முறையில் 3,577 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர்; இதில் 470 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற 108 பேர் அடுத்தகட்டத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். இவர்கள் காணொளி வாயிலாக நேர்காணல் செய்யப்பட்டனர், அதன் பிறகு 17 பேர் இறுதிப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இறுதிக்கட்ட நேர்காணலுக்காக அந்த 17 பேரும் அயோத்திக்கு அழைக்கப்பட்டனர்; அவர்களில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் நேர்காணலில் பங்கேற்றனர். இறுதியில், மூன்று பேர் கொண்ட பட்டியல் அறக்கட்டளைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதில் அயோத்தியை சேர்ந்த மதன் மோகன் பாண்டே, டில்லியை சேர்ந்த மகேஷ் பக்சந்தா மற்றும் உபியின் ஷிகோஹாபாத்தை சேர்ந்த நிர்மல் யாதவ் ஆகியோர் அறக்கட்டளை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், அயோத்தி கோவில் முதல் தலைமை செயல் அதிகாரியாக விமானப்படையில் ஏர் மார்ஷல் ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜிதேந்திரா மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். விமானப்படையில் 39 ஆண்டு அனுபவம் உள்ள ஜீதேந்திரா மிஸ்ரா, போர் விமானத்தை இயக்கிய அனுபவம் உள்ளது. 2025 ம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கு வான் கட்டளை பிரிவின் தலைவராக பொறுப்பு ஏற்றார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு தலைமை ஏற்றார்.