ஸ்ரீசத்ய சாய் பிரேம ரதத்துக்கு நல்லுாரில் சிறப்பான வரவேற்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வலம் வரும் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பிரேம ரதத்துக்கு நேற்று நல்லுாரில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வலியுறுத்திய அன்பு, சேவை மற்றும் ஆன்மிகத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரேம ரதம் பல்வேறு பகுதிகளில் வலம் வருகிறது. கடந்த 26-ம் தேதி திருப்பூர் வந்த இந்த ரதம், தினமும் பல்வேறு பஜன் மையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளுக்கு சென்று வருகிறது. முதல் நாளில் ராம்நகர் ஸ்ரீ சத்ய சாய் விஹார் பகுதியில் ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து வேலம்பாளையம், குமரானந்தபுரம், ராயபுரம், கருவம்பாளையம் பகுதிகளில் உள்ள பஜன் மண்டல்களிலும், வித்யா மந்திர் பள்ளி, ராமகிருஷ்ணா பள்ளி மற்றும் சாய் மெட்ரிக் பள்ளியிலும் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எட்டாவது நாளான நேற்று, நல்லுார் பஜன் மண்டல் பக்தர்கள் சார்பில் பிரேம ரதத்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக வேத பஜன் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பூரண கும்ப மரியாதையுடன் ரதம் வரவேற்கப்பட்டது. இதில் பஜன் மண்டல் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பிரேம ரதம் தொடர்ந்து காட்டுவளவு, கல்லாங்காடு பகுதிகளுக்கு செல்ல உள்ளது. நாளை (5-ம் தேதி) வி.ஏ.டி. பள்ளியிலும், 6-ம் தேதி காளிபாளையம், இடுவாய், 7-ம் தேதி பல்லடத்துக்கும் பிரேம ரதம் செல்கிறது. வரும் 17-ம் தேதி வரை திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரேம ரதம் வலம் வர உள்ளது.